கிடுக்கிப்பிடி, குரூப் - 4, தேர்வு_முறைகேடு, பயிற்சி , தமிழர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஆணையத்தின் ஊழியர் உள்ளிட்ட, மேலும் இரண்டு பேர், நேற்று கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், இந்த முறைகேட்டில், பயிற்சி மையங்கள் பலவற்றுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளதால், சந்தேகத்திற்குரிய பயிற்சி மையங்களில், கிடுக்கிப்பிடி விசாரணை மற்றும் சோதனை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனால், இடைத்தரகர்கள் வாயிலாக, கோடிகளை சுருட்டியவர்களுக்கு, 'கிலி' ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 4 தேர்வில், மெகா முறைகேடு நடந்து இருப்பதை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை ஊழியர் ரமேஷ், 39; எரிசக்தி துறை ஊழியர் திருக்குமரன், 35; இடைத்தரகராகச் செயல்பட்ட, சென்னை, ஆவடியைச் சேர்ந்த வெங்கடரமணன், 38; காலேஷா, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன், குரூப் - 4 தேர்வில், பல லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்று, முதலிடம் பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், கோடனுார் கிராமத்தைச் சேர்ந்த திருவேல் முருகன், 31; கடலுார் மாவட்டம், சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 26; திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார், 21, ஆகியோரும் கைதாகினர். மோசடி

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.இந்த மோசடிக்கு, சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது.ஜெயகுமாருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்த, டி.என்.பி.எஸ்.சி., ஊழியரான, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன், 45 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இடைத்தரகராகச் செயல்பட்ட, தேனி மாவட்டம், சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ், 45, என்ற இருவர், நேற்று கைது செய்யப்பட்டனர்.கைதான ஓம்காந்தன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:

சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, பழனி என்ற இடைத்தரகர் வாயிலாக, ஜெயகுமாரின் அறிமுகம் கிடைத்தது. இவர், அரசியல்புள்ளிகளுக்கு நெருக்கமானவர். எந்த உதவி கேட்டாலும், உடனடியாக செய்து கொடுப்பார். விடுமுறை நாட்களில்,பண்ணை வீடுகளில்,உற்சாக பானத்துடன், 'உல்லாச' விருந்தளிப்பார்.குரூப் - 4 தேர்வில், தனக்கு வேண்டிய நான்கு பேரை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என, கேட்டார்; அதற்காக, 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். பொறுப்பு

முன்பணமாக, 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர் கூறியபடி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையத்திற்கு, தட்டச்சர் மாணிக்கவேலுக்கு உதவி யாளராக சென்றேன்.எங்களிடம் தான், ராமநாதபுரம் மாவட்ட மையங்களின் விடைத்தாள்களை, சென்னைக்கு எடுத்து வரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. காரில் ஜெயகுமாரும், ராமேஸ்வரம் வந்து விட்டார். அங்கு தான் சதித் திட்டம் தீட்டினோம். தேர்வு முடிந்ததும், நானும், மாணிக்கவேலும், ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்த, குரூப் - 4 தேர்வு விடைத்தாள்களை வாங்கி, பண்டலாக கட்டி இரவு, 9:50 மணிக்கு, 'ஏ.பி.டி., பார்சல்' வாகனத்தில் ஏற்றி, சென்னைக்கு புறப்பட்டோம். 

விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த பார்சல் வாகனத்தின் சாவி, என்னிடம் இருந்தது. எங்களுடன் ஒரு போலீஸ்காரரும் வந்தார்.எங்கள் வாகனத்தை பின் தொடர்ந்து, காரில் ஜெயகுமாரும் வந்தார். வாகனம், இரவு, 10:30 மணிக்கு, சிவகங்கையை தாண்டியபோது, 'அளவுக்கு அதிகமாக பசிக்கிறது' என, நாடகமாடினேன். இதனால், வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, எதிரே இருந்த ஓட்டலுக்கு, நானும், போலீஸ்காரரும், வாகன டிரைவரும், தட்டச்சர் மாணிக்கவேலும் சாப்பிடச் சென்றோம். 

அப்போது, ஓட்டலுக்கு வெளியே காத்திருந்த ஜெயகுமாரிடம், விடைத்தாள்கள் இருந்த வாகனத்தின் சாவியை கொடுத்தேன். அவர், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மைய விடைத்தாள் பண்டல்களை எடுத்து சென்றார். அழியும் மை

நாங்கள் ஏற்கனவே, இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு, அழியும் மை நிரப்பிய பேனாவை கொடுத்து இருந்தோம். அவர்களின் விடைத்தாள்களில் மை அழிந்து விட்டதால், அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. அந்த இடங்களில், ஜெயகுமார் விடைகளை எழுதி, காரில் பின் தொடர்ந்து வந்தார். 

அதிகாலை, 5:30 மணிக்கு, எங்கள் வாகனம், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வந்தது.அப்போது, 'டீ குடிப்போம்' என, வாகனத்தை நிறுத்தச் சொல்லி, போலீஸ்காரர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து சென்றேன். அவர்கள், 'டீ' குடித்து கொண்டிருந்த போது, சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறி வெளியே வந்து, அங்கு நின்ற ஜெயகுமாரிடம் சாவியை கொடுத்தேன். 

அவர் விடைத்தாளர்களை மீண்டும் வாகனத்தில் வைத்து விட்டார். பின், அந்த விடைத்தாள்கள் அடங்கிய பண்டல்களை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம். இவை அனைத்தையும், நானும், ஜெயகுமாரும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தினோம்.இவ்வாறு, ஓம்காந்தன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இந்த மோசடியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பயிற்சி மையங்களின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சந்தேகத்திற்குரிய மையங்களில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவும், அதிரடி சோதனை நடத்தவும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதேபோல, ஏற்கனவே நடந்த, 'குரூப் - 2' தேர்விலும் மோசடி நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்தும், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படலாம் என்பதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், இடைத்தரகர்கள் வாயிலாக, பல கோடி ரூபாய் சுருட்டியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.'கறுப்பு ஆடுகள் மீது நடவடிக்கை'சென்னை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, சீரமைப்பு பணி முடிந்து,திறக்கப்பட்டது. சுரங்கப் பாதையை, போக்குவரத்திற்கு திறந்து வைத்த பின், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட, கறுப்பு ஆடுகள் விரைவில் களையப்படுவர். 

எந்த தேர்வானாலும், முறைகேடு இல்லாத நிலை உருவாக்கப்படும்.அரசு தேர்வுகளில், முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும், உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., தான் ஊழலின் மொத்த உருவம். தமிழர்களின் தன்மானத்தை கெடுத்தவர்கள். அவர்களுக்கு முதல்வரை குறை கூற, உரிமை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.