சிவகங்கை:‛‛பிளஸ் 1, 2 மாணவர்களின் நலன் கருதி, செய்முறை தேர்வினை அரசு பிப்.,15 க்கு பின்னர் நடத்த வேண்டும்,'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்.,3 முதல் தொடங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இக்கல்வி ஆண்டில் தொடர் மழை, அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் உள்ளாட்சி தேர்தல், ஓட்டு எண்ணும் பணி என பல நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 
ஜன.,6 ல் பள்ளி திறந்ததும் மாணவர்கள் சிறப்பு தேர்வை சந்தித்தனர். பொங்கல் விடுமுறைக்கு பின்னர் தான் 2 வது சிறப்பு திருப்புதல் தேர்வை சந்தித்தனர். இச்சூழலில், பிப்.,3 முதல் செய்முறை தேர்வு அறிவித்துள்ளது.
இதை மாற்றி தமிழக கல்வித்துறை இத் தேர்வை பிப்.,15 முதல் 27 வரை நடத்த உத்தரவிட வேண்டும். செய்முறை தேர்வு முடிந்ததும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும். இதை தவிர்த்து, அரசு தேர்வுக்கு தயார் படுத்த செய்முறை தேர்வினை தள்ளிவைத்தால், கிராமப்புற, ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற ஏதுவாக அமையும். இது குறித்து கல்வித்துறை செயலர், இயக்குனர்களிடம் முறையிட்டுள்ளேன், என்றார்.====