சென்னை :தமிழகத்தில், 1.30 கோடி வாக்காளர்களின், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை மாற்றி அமைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், வாக்காளர்களுக்கு, 1995ம் ஆண்டிலிருந்து, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன்படி, 2010ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட, வாக்காளர் அடையாள அட்டையில், 12 இலக்க எண், அடையாள எண்ணாக இடம் பெற்றுள்ளது.மாநிலத்தின் பெயரில் உள்ள, முதல் இரண்டு எழுத்துக்கள், அதைத் தொடர்ந்து மாவட்ட கோடு எண், சட்டசபை தொகுதி எண், வரிசை எண் என, 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த பத்து ஆண்டுகளாக, மூன்று ஆங்கில எழுத்து மற்றும் ஏழு எண்களுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர், எந்த ஊருக்கு இடம் மாறினாலும், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் மாறாது. ஏற்கனவே வழங்கப்பட்ட, 12 இலக்க வாக்காளர் அடையாள அட்டையுடன், 1.30 கோடி வாக்காளர்கள், தமிழகத்தில் உள்ளனர். அதேபோல், இந்தியா முழுவதும், கோடிக்கணக்கான வாக்காளர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவருடைய அடையாள அட்டை எண்ணை, ஏழு இலக்க எண்ணாக மாற்ற, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண் மாற்றப்படுவோருக்கு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.