சென்னை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாளை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள்களின் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் வெளியிட்டுள்ளது. இதன் விலை 60 ரூபாய்.பிளஸ் 2 மாணவர்களுக்கு கணித பாட பிரிவுக்கான வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு 80 ரூபாய் விலையில் தனித்தனியாக கிடைக்கும். ஜன. 27ம் தேதி முதல் இந்த தொகுப்பு புத்தகத்தை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்; கலை பாட பிரிவுக்கு 80 ரூபாய் விலையில் வினாத்தாள் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் தொகுப்பு பிப்ரவரி முதல் விற்பனைக்கு வரும்.சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் அங்குள்ள தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் வினாத்தாள் தொகுப்பு விற்கப்படவில்லை.சென்னையில் எம்.எம்.டி.ஏ.வில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி; சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளி; சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலை பள்ளி வளாகங்களில் கிடைக்கும்.காஞ்சிபுரத்தில் சீனிவாசா நகராட்சி மேல்நிலை பள்ளி திருவள்ளூரில் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி கோவை ராஜ வீதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலை பள்ளி ஆகியவற்றில் கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியில் வினா தொகுப்புகள் விற்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.