சென்னை :'தேசிய அளவில் நடத்தப்படும், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தையும், தமிழில் நடத்த, மத்திய அரசு முன் வர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகளின் முதன்மை தேர்வை, இனி தமிழ் உள்ளிட்ட, 10 மாநில மொழிகளில் நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரும், 2021 முதல், தமிழ்வழி தேர்வு நடைமுறைக்கு வருகிறது. 

ஆனால், கூட்டு நுழைவு தேர்வுகள், 2020 ஜனவரி மற்றும் ஏப்ரல் என, இரு முறை நடத்தப்பட உள்ளன.ஜனவரியில் இல்லாவிட்டாலும், ஏப்ரலில் நடக்க உள்ள, ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகளையாவது, தமிழ் மொழியில் நடத்த, மத்திய அரசு முன் வரவேண்டும். ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகள் மட்டுமின்றி, தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தையும், தமிழில் நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.புவி வெப்பமயமாதல்:அன்புமணி கவலைபா.ம.க., இளைஞரணி மாநில செயலர் அன்புமணி அறிக்கை:'புவி வெப்பமயமாதல் விகிதம், எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்கிறது; காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்த, இன்னும் கூடுதலான வேகத்தில், உலக நாடுகள் செயல்பட வேண்டும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள், இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பது கவலை அளிக்கிறது. ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டியபடி, நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையங்களை கைவிடுதல், தொழிற்சாலைகளை துாய தொழில் நுட்பங்களுக்கு மாற்றுதல், பொது போக்குவரத்து வசதிகளை அதிகமாக்குதல், வாகனங்கள் வாயிலாக மாசு பரவுவதை ஒழித்தல் ஆகிய நான்கு நடவடிக்கைகளை, மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.