சென்னை:லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்குவதற்காக, 126 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்பு முதல், ஓட்டு எண்ணிக்கை வரை, ஒரு மாதத்திற்கும் மேலாக, தேர்தல் பணி நடந்தது. இதில், ஈடுபட்ட, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மாநகராட்சி கமிஷனர், தேர்தல் தாசில்தார் போன்றோருக்கு, அதிகபட்சம், 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபட்ட, கோட்டாட்சியர், தாசில்தார், நகராட்சி கமிஷனர்கள் மற்றும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றோருக்கு, அதிகபட்சமாக, 24 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படும்.கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் போன்றோருக்கு, அதிகபட்சமாக, 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டோருக்கு, 7,000 ரூபாய்; பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் எண்ணிக்கைக்கேற்ப, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.