செப்டம்பர் 5 சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களால் டெல்லியில் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் அவர்களும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை அழைத்து வாழ்த்து தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி தொடங்கி வாஜ்பாய் அரசு வரை 322 ஆசிரியர்களுக்கு இந்திய நாடு முழுவதும் தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் உள்ள மத்திய அரசு சென்ற ஆண்டு முதல் அந்த விருதின் எண்ணிக்கையினை 150 ஆக குறைத்துவிட்டார்கள். இதுவரையில் தமிழகத்தின் சார்பில் தேசிய விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வந்தார்கள். ஆனால் சென்ற ஆண்டு ஒரே ஒருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக திட்டமிட்டு விருது வழங்குவதில் கூட தமிழகத்தை மத்திய அரசு பழி வாங்கி வருவதற்கு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பிலும் கொந்தளிப்பான அதிருப்தியினை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு சார்பில் பெரிய மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஆறு பேரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறு பேரும் சிறிய மாவட்டங்களாக இருந்தால் சமமாக தலா ஐந்து பேரும் தேர்வு செய்து வந்ததுள்ளார்கள். மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் உட்பட 32 பேரும், எஸ் சி இ ஆர் டி க்கு10 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று பேரும் என 390 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசின் சார்பில் விழா எடுத்து விருதுகள் வழங்கி வந்தார்கள். விருது பெறும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது கற்பித்தல் பணியில் அவருடைய திறனறிவு, பள்ளிச் சூழலை பசுஞ்சோலையாக ஆக்கிவைத்தல், மாணவர்கள் பெற்றோரிடம் அவர் கொண்ட அணுகுமுறை இவற்றையெல்லாம் ஆய்வு செய்து தேர்வு செய்வதுதான் நடைமுறையாகும். ஆனால் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசும், மாண்புமிகு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறையும் இந்த ஆண்டு விருது பெறுபவர்களை தேர்வு செய்வதில் ஆசிரியர்களை பழிவாங்கி உள்ளார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடி ஊதியம் இழந்துள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடுமையான உத்தரவை தேர்வுக் குழுவிற்கு பிறப்பித்துள்ளார். ஒருநாள் போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கும் இந்த விருது இல்லை என ரகசிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தொடக்கக் கல்வி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் 90 விழுக்காட்டினர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே உள்ளார்கள். முதல் உத்தரவில் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள், 17பி குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் மட்டும் தான் தேர்வு செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் அந்த ரகசிய உத்தரவில் அனைத்து ஆசிரியர்களையும் பழி வாங்கி உள்ளார்கள். போராட்டங்கள் இல்லையேல் இந்த நாட்டிற்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வாழ்வாதார போராட்டத்தைதான் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நடத்தினார்கள். டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் அரசில் போராடி சிறை சென்றவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசில் 30க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் இருந்த ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 1988இல் ஆளுநர் ஆட்சியின்போது போராடி 27 நாட்கள்வரை சிறை சென்றவர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஏன் 2003 டெஸ்மா போராட்டத்தில் கலந்துகொண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கூட டாக்டர் செல்வி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டது. தேசிய விருதும் வழங்கப்பட்டது என்பது மறுக்க முடியாது உண்மை சம்பவங்களாகும். அதேபோன்று போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற பேராசிரியர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் உட்பட இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்துள்ளார்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா?.ஆனால் கற்பித்தல் பணியில் சிறந்தவர்களுக்கு தான் விருதே தவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் இணைந்து செயல்படுத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்களின் சார்பிலும், ஆசிரிய சமுதாயத்தின் சார்பிலும் விருது வெளிவந்தவுடன் ஆய்வு செய்து நீதி மன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் மட்டும் அல்ல உச்ச நீதிமன்றம் வரைச்சென்று சட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் தற்போது விருதின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்தவர்களின் கற்பித்தல் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபடாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருதின் தேர்வு நடைபெறுகிறது. சில மாவட்டங்களில் பட்டியல் கொடுக்க முடியாமல் இன்றுவரை தடுமாறி வருகிறார்கள். உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் விருதினை தேர்வு செய்கிற போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கப்படமாட்டாது என்ற விதிமுறைகள் எதுவும் வகுத்து வெளியிடப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் முதன்மைச் செயலாளரும் பின்லாந்து நாட்டிற்கு அங்குள்ள கல்வி முறையை தெரிந்து வர சென்றிருக்கிறார்கள். புதிய பாடத் திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழகத்தில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை அவமதித்து பழி வாங்கி வருகிறார்கள். ஆனால் யாரை வைத்து தமிழகத்தில் கல்வித் துறையை முன்னேற்ற போகிறார்கள். இதற்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சமீபத்தில் சேலத்தில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய போது நீதிபதிகளும் ஆசிரியர்களும் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று இதயம் திறந்து பாராட்டியுள்ளார்கள். ஆனால் இங்கே தொடர்ந்து ஆசிரியர்கள் அவமரியாதைக்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அமைதியாக இருக்கிற ஆசிரியர்களை மீண்டும் களத்தில் நின்று போராட தூண்டுபவர்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், முதன்மைச் செயலாளரும் என்ற குற்றச்சாட்டினை பகிரங்கமாகவே நாங்கள் முன்வைக்கிறோம். மானம் இழந்து மரியாதை இழந்து இனி அமைதி காத்து பயனில்லை. பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்!! என்ற உணர்வுதான் இன்று ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் வரும் காலம் பதில் சொல்லக் காத்திருக்கிறது.

*நம்பிக்கையுடன்.*
*வா. அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*