நிலவை நெருங்குகிறது  'சந்திரயான் - 2' விண்கலம்


பெங்களூரு:சந்திரயான் - 2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதையில் நான்காவது நிலைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' ஜூலை 22ல் விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் கடந்த 14ம் தேதி அதிலிருந்து விலகி நிலவை நோக்கி பயணித்தது.இதையடுத்து நிலவின் சுற்று வட்டப்பாதையில் படிப்படியாக மூன்று முறை விண்கலம் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் சந்திரயான் - 2 விண்கலம் ஏவப்பட்டதில் நேற்று முக்கிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இதன்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நான்காவது நிலைக்கு சந்திரயான் - 2 முன்னேறியது. இதன்மூலம் சந்திரயான் விண்கலம் நிலவுக்கு மிக அருகில் சென்று விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் கூறியதாவது:சந்திரயான் - 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை சரியான திசையில் உள்ளது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் நான்காவது நிலைக்கு முன்னேறியுள்ளது.செப்., 2ம் தேதி விண்கலத்தின் 'லேண்டர்' எனப்படும் தரையிறங்கும் கருவி தனியாக பிரிந்து நிலவின் 100 கி.மீ. சுற்று வட்டப்பாதையை நெருங்கும். இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி செப்., 7ம் தேதி சந்திரயான்- 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.